துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்து விடுவோம் என்று கூறுகிறார். ஆனால், அவருடைய கனவு பலிக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அயோத்தி இந்தியாவில்தான் இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லையே. அயோத்தி மாதிரி தமிழ்நாடு வரதுல வந்து தவறில்லை.
நாம் எல்லாம் ராமருடைய ஆட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக, அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி எப்படியானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமருடைய ஆட்சி போல் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் தர்ஹா அருகில் உள்ள தீபத்தூண் என்ற ஒரு தூணில்தான் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தர்ஹா சம்பந்தப்பட்டவர்களும், எந்த இஸ்லாமியர்களும் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் சொன்னதைக் கேட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் மதக் கலவரம் வர எந்தவிதமான முகாந்தரமும் இல்லை. அப்படி இல்லாத பட்சத்தில், மதிப்புக்குரிய கனிமொழி, துணை முதலமைச்சரும் இதில் ஏன் பாசம் கொள்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்து விடுவோம் என்று கூறுகிறார் அவர் அதற்கான ஆரம்ப கட்ட வேலையில் ஈடுபடுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கனவு பலிக்காது. அவருடைய காலம் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.




