கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி டிஜிபி க்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதிமுக தென் சென்னை (வடக்கு மேற்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான
ஆர். த்ரிசூலி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தனது தொலைபேசி மூலம் அநாகரிகமான மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள்ளும் அவர் போதையில் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் ஒரு பெண்ணுக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், பொது அமைதியையும் சமூக ஒழுங்கையும் காக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அக்கோரிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.