உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், தல்புராவில் வசித்து வந்தவர் அனிதா சவுத்ரி(40). ஜான்சி மாவட்டத்தின் முதல் ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று நள்ளிரவு ஸ்டேஷன் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அருகில் ஆட்டோ கவிழ்ந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நவாபாத் காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அனிதா விபத்தில் இறந்ததாக கருதி அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், அனிதா சவுத்ரி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. இதையடுத்து அனிதாவின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், அனிதாவின் நண்பர் முகேஷ் ஜா,அவரது மகன் சிவம், உறவினர் மனோஜ் ஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின் சிவம், மனோஜை போலீஸார் கைது செய்தனர். முகேஷை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், தலைமறைவாகியுள்ள முகேஷுடன் அனிதா பல வருடங்களாக நட்புடன் இருந்ததுடன், அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அனிதாவின் சகோதரியை முகேஷ் நீண்டகாலமாக துன்புறுத்தி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அனிதா தனது குடும்பத்தைக் காப்பாற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவை கடன் வாங்கி இரவும், பகலும் ஓட்டி குடும்பத்தை காப்பாற்றினார். அவரது துணிச்சலைப் பாராட்டி அப்போதைய டிஐஜி ஜோகேந்திர குமார் அனிதாவை கவுரவித்தார். அப்படிப்பட்ட அனிதா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறினர்.