காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளையில் ரத்தக்கசிவு, உடலில் காயங்கள்!*
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மூளையில் வீக்கமும், ரத்தக்கசிவும் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதயம் வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்ததுடன், அதன் வலதுபுற அறைகளில் ரத்தம் மற்றும் ரத்தக்கட்டிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழுத்தின் வலதுபுறத்தில் ஊசி குத்தியது போன்ற மூன்று அடையாளங்களும், முதுகுப் பகுதியில் ஐந்து தனித்தனி ரத்தக்கட்டுக் காயங்களும் காணப்பட்டதாகப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல் வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.