தமிழ்நாடு முழுவதும் இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்முக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (பிப்ரவரி 9) மூடி போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி இன்று பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மதுபான கடைகளை மூடி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.