அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி இன்று வருகை தந்தார். சட்டமன்றத் தேர்தல் குறித்து அவர்கள் விவாதித்தனர். இதன் பின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், " அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி. திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி" என்று தெரிவித்தார்.
இதன்பின் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,. " பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது. மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்" என்றார்.