அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான குழு இன்று(ஜனவரி 7) சந்தித்து பேசியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கே மாதங்கள் உள்ளன. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி இன்று வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் அவரை வரவேற்றனர். பாமக தலைவர் அன்புமணியுடன் வழக்கறிஞர் கே.பாலு, திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாகவும், தொகுதிகள் எண்ணிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த கூட்டணியில் உள்ள பாமக, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் இதுவரை இணையவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இன்னும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணையும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.