உலகின் 100 நாடுகளில் இலவச மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளை வழங்கி வரும் ‘ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்’, தற்போது தமிழகத்திலும் தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளது. மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை, தென்காசியில் இலவச குருகுலம் தொடங்கப்படுவதுடன், திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சத்ய சாய் மீனாட்சிநிகேதன் குருகுலத்தை பல்கலைக்கழக அளவுக்கு உயர்த்தும் நோக்கமும் உள்ளது என்று ‘ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்’ நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் தெரிவித்தார்.
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இதயம் டூ இதயம் உரையாடல்’ நிகழ்ச்சியில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி செயலாளர் ஹரி தியாகராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் பதிலளித்தார்.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் முட்டனஹள்ளியில் உள்ள சத்ய சாய் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஒன் வேர்ல்ட் ஒன் ஃபேமிலி மிஷன்’ சார்பில், தருமை ஆதீனத்தின் ஒத்துழைப்புடன் மயிலாடுதுறையில் 60 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாக சத்குரு தெரிவித்தார்.
ஆன்மிக மையங்களின் நோக்கம் கல்வி மற்றும் சுகாதார சேவையாக இருப்பது சிறப்பான செயலாகும் என்று குறிப்பிட்ட அவர், “வளமான தமிழகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை”
“கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. குழந்தைகளுக்கு சேவை செய்வதே சமூக சேவை. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவது சமூகத்தின் கடமை” .
இலங்கையில் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து விளக்கமளித்த சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் போரின் தாக்கத்தால் சுமார் 30,000 பேர் விதவைகளாகியுள்ளனர். வறுமை அவர்களை வாட்டி வதைக்கிறது. குழந்தைகளுக்கு முறையான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கு சேவை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். ஃபிஜி, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் தங்களது மிஷன் சார்பில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
“செல்வந்தர்கள் அதிகமாக பணம் சம்பாதித்தாலும், அந்தப் பணம் முழுவதும் அவர்களுக்குச் சொந்தமானது அல்ல. தொழிலதிபர்கள் மனித உடலின் வயிற்றைப் போன்றவர்கள். நாம் உட்கொள்ளும் உணவை வயிறு செரித்து தன்னிடமே வைத்துக் கொள்வதில்லை. அதுபோல தொழிலதிபர்களும் சமூகத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்தியாவின் தாராள மனப்பான்மை கொண்ட கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டு பாணியிலான பணம் சம்பாதிக்கும் கலாசாரத்தைப் பின்பற்றக் கூடாது.
இந்திய கல்வித் துறையில் உபநிஷதங்கள் போன்ற பாரம்பரிய ஆன்மிகக் கல்வியை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார். “இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆன்மிகமே தீர்வாகும். ஆன்மிகம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆன்மிக உணர்வு குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்தால், அவர்கள் தவறான பாதையில் செல்லமாட்டார்கள்”.
அதேவேளையில், ஆன்மிகக் கல்வி என்பது மதம் குறித்து அறியாமையை வளர்ப்பதாக இருக்கக் கூடாது; மாறாக மதத்தின் உண்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
“மதத்தை முற்றிலும் புறக்கணித்து வாழக் கூடாது. அதேபோல் மதத்தை வெறும் ஆடம்பரமாகவும் அணுகக் கூடாது. மதத்தை ஆழமாகவும் பற்றற்ற நிலையிலும் படிக்க வேண்டும்”.
உலகில் எதிர்மறையான சூழல்கள் இருப்பது இயல்பானது. அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பகிர்ந்துகொண்ட திண்டுக்கல் ஸ்ரீ சத்ய சாய் மீனாட்சிநிகேதன் குருகுல மாணவி சங்கவி, “கடுமையான வறுமையில் இருந்த எனது பெற்றோர் என்னை இங்கு சேர்த்த பிறகு, நான் ஒரு புதிய உலகிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமத்தின் எல்லைக்குள் மட்டுமே இருந்த நான், இன்று ஒரு உலகக் குடும்பத்தின் உறுப்பினராக இருக்கிறேன். சமூக சேவையே மனித வாழ்க்கையின் நோக்கம் என்பதை இங்கு கற்றுக்கொண்டேன்” என்றார்.
தருமை ஆதீனம் சிவகுருநாத தம்பிரான், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திக் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் சத்குரு மதுசூதனன் சாய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ சத்ய சாய் மனித மேம்பாட்டு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (மதிப்பீடு) டாக்டர் எஸ். கோகுல பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.