திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தமிழக அரசு செயல்படுத்தாமல் புறந்தள்ளிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தர்கா வழிபாடுகளுக்கு இடையூறு இன்றி, கோயில் நிர்வாகம் அங்கீகரிக்கும் குழுவினர் மட்டும் உரிய பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியுள்ளது.
கடந்த காலங்களில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது சட்டம் ஒழுங்கு கெட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. "சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை மீறி, ஆட்சியாளர்கள் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்களா?"
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதும், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் தவெக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"உங்கள் வீட்டுப் பிள்ளை ஆட்சி" எனக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், ஆட்சியின் பெரும்பான்மையைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறு செய்யும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கிறாரா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. திறமையான காவல்துறை இருந்தும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தடுமாறுகிறது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.