தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பி ஓட்டம்.
17 தனிப் படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது போல் நாடகமாடியுள்ளார்.
அப்போது சிறைப் பணியில் இருந்த இரண்டாம் நிலைக்காவலர் தங்கபாண்டி என்பவர் விசாரிக்கச் சென்றார். அப்போது ஒரே அறையில் இருந்த கைதிகள் கும்பலாகச் சேர்ந்து காவலரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ளனர்.
கைதிகள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறைக் காவலர் தங்கபாண்டி, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து தேனி மாவட்ட எஸ்பி உட்பட போலீசார் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தப்பியோடிய கைதிகளை உடனடியாகப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட போலீசாருடன் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீசாரும் இணைந்து தீவிர வாகன தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தமிழக – கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மண்டல காவல் துறை ஐஜி விஜயந்திர பிதாரி நேரடியாக சிறைக்குச் சென்று கைதிகள் அறைக் கதவுகள் திறக்கப்பட்ட விதம், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறைக்குப் பின்புறம் இருந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் ஒரு கைதி என இருவரை போலீசார் பிடித்துள்ளனர். மீதமுள்ள 15 கைதிகளைத் தேடும் பணி விடியவிடிய தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.