காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஜெயந்தி விழா மதுரையில் நடந்தது.
கூடல் நகர் ஆனையூர் ரோடு வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கிரு ஹத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் ருத்ர பாராயணம் செய்தனர்.
அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமை வகித்து பேசியதாவது;
பாரம்பரிய ஆன்மிகத்திற்கும் சமூக நலனுக்கும் இடைவெளியைக் குறைத்ததில், புது பெரியவா என பக்தர்களால் அழைக்கப்பட்ட ஜெயந்திரரின் பங்கு அதிகம். பல ஆண்டுகளாக வேதங்கள், சாஸ்திரங்கள், இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதிலும், தர்மத்தைப் பாதுகாக்கவும் தன்னை அர்ப்பணித்தவர்.
பள்ளிகள், எளிதில் அணுகக்கூடிய மருத்துவமனைகள், கண் பராமரிப்பு முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி, மடத்தின் செயல்பாடுகளை மக்கள் நலத்திட்டங்களாக விரிவுபடுத்தினார்.
ராம ஜன்ம பூமி இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் முக்கிய நபராக இருந்து, தேசிய கலாச்சார மேம்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தார்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.