பிக் பாஸ் ஷோவிற்குள் வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேண்டாம் என்று சொன்னாங்க என டைட்டில் வின்னர் பட்டம் வென்ற திவ்யா கணேஷ் கூறினார்.
கடந்த பல ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 'பிக் பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று இரவு நடைபெற்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி கட்டத்தில் திடீரென கம்ருதீன், பார்வதி ஆகிய இருவரும் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணப்பெட்டி டாஸ்கில் 18 லட்ச ரூபாயுடன் கானா வினோத் வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர். திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷை டைட்டில் வின்னராக விஜய் சேதுபதி அறிவித்தார். சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னரான திவ்யா கணேஷ் கூறுகையில், " என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்களில் வேலை செய்துள்ளேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனால், விருது கிடைக்காது. பிக் பாஸ் ஷோவிற்குள் வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து நிகழ்ச்சிக்குள்ள வரலை. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானாக இருந்ததால் கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.