கர்நாடகா பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோகர்ணாவுக்கு சென்ற சொகுசு பஸ் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவே இருந்த தடுப்புச்சுவரை தாண்டி சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து, லாரி இரண்டும் தீப்பிடித்து எறிந்தன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.