ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா என்று கேள்வி கேட்ட நிருபர்களிடம், எந்த ஓபிஎஸ் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி கேட்டு அதிர வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி இந்த முறை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகள் தருவதுடன், விருப்ப மனுக்களையும் பெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்குவாரா அல்லது திமுக, தவெக கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், மதுரைக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.
அப்போது "ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா, திமுக அல்லது தவெகவில் இணைவாரா?" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "எந்த ஓபிஎஸ்.?" என்று கேட்டுவிட்டு அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் சென்று விட்டார். இதனால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.