பல சிறுமிகளை சீராளித்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் வீரமணி மீது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது 6-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரமணியின் வீட்டில் ஐ ஜி தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள், வீடியோ எடுக்க பயன்படுத்திய வீடியோ கேமிராக்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றியுள்ளனர். போக்ஸோ புகாரில் 2 ஆண்டுகளுக்கு முன்பே உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்ததும் புகாரில் வழக்கு பதிவு கூட செய்யாமல் கிடப்பில் போட்டது யார் என்றும் தனிப்படை போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் எப்போது தங்கள் மீது வழக்கு பாயுமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தங்க கட்டிகளை கொடுத்ததாக கூறப்படும் புகார்கள் அடிப்படையிலும் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரகாஷின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வீடுகளிலும் தனிப்படை போலீசார் சோதனை நடத்திய நிலையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த வழக்கில் முக்கிய குற்றசாட்டான உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தங்க கட்டிகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் யார் மூலம் கைமாறியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பணம் மற்றும் தங்க கட்டிகள் கைமாறியதில் வீரமணியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும், ரியல் எஸ்டேட் உரிமையாளர் பிரகாஷ் மற்றும் வீரமணியின் கணக்கு வழக்குகளை கவனித்துவரும் ஆடிட்டர் ஆகியோர்தான் கையாண்டது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீரமணியின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் இவர் மீது வழக்கு பதிவு செய்து தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தலாமா என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல 2024ம் ஆண்டு காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் ஆதாரங்களுடன் கொடுத்த புகார் மீது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த ராதிகாவிற்கு ஆணையராக இருந்த அருண் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பி ஆய்வாளர் மகேஷ்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகும் இந்த புகாரில் ஏன் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த வழக்கை பதிவு செய்யவிடாமல் தடுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் யார்? யார் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரிடம் தனிப்படை போலீசார் 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இதில் உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு ரஞ்சன்குமார் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யாமல் தடுத்தது மற்றும் 2025-ம் ஆண்டு தரப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்தும் பெயரளவில் விசாரணை நடத்திவிட்டு வழக்கை இழுத்துமூட அழுத்தம் கொடுத்தது யார்? இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் 2 நாட்களாக ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 கேள்விகள் தரப்பட்டு பதில் பெறப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட இந்த வழக்கில் பணம் கைமாறியதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் இந்த விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கு வரும் வாரத்தில் போக்ஸோ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த உயர் அதிகாரிகள், இதற்காக பெற்ற பலன்கள், அதிகார துஷ்பிரயோகம், வழக்கில் கிடைத்துள்ள முக்கிய ஆதாரங்கள் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கையில் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்யாமல் தடுத்த அதிகாரிகள் குறித்து டிஐபி, உள்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பேரில் முக்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் மற்றும் கைது நடவடிக்கைகள் வரை இருக்கலாம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.