பிரேசிலில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். லாரியில் இருந்த மணல், பஸ்சில் கொட்டியதால் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2024-ம் ஆண்டில் பிரேசிலில் விபத்துகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.