காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பது தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், " பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து" என்றார்.