உலகத்தின் மொத்தத் திட்டத்தையும் விளையாட்டில் கற்பித்த ஆசிரியர்
நீடித்த நிலையான மேம்பாட்டு குறிக்கோள்களை மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் பொருளியல் பாடத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கள ஆய்வு மற்றும் விளையாட்டுகள் மூலம் பாடம் நடத்தி வருகிறார்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு கலைப் பிரிவு மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தின் பத்தாவது இயலான சுற்றுச்சூழல் பொருளியலில் உள்ள நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகள் (Sustainable Development Goals) தலைப்பில் பாடம் நடத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை 2015-ம் ஆண்டில் உலக நாடுகளின் வளர்ச்சிக்காக நீடித்த நிலையான வளர்ச்சிக்காக 17 குறிக்கோள்களான வறுமையற்ற நிலை, பட்டினியில்லா நிலை, சிறந்த உடல்நலம், தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான
குடிநீர் மற்றும் துப்புரவு, தூய்மையான மற்றும் மலிவான ஆற்றல், நல்ல வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வு குறைப்பு, நிலைத்த நகரங்கள் மற்றும் சமூகங்கள், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, தட்பவெப்பநிலை நடவடிக்கை, நீருக்கடியில் வாழ்க்கை, நிலப் பகுதியில் வாழ்க்கை, அமைதி மற்றும் நீதிக்கான வலிமையான நிறுவனங்கள், மற்றும் இலக்குகளை அடைவதில் கூட்டு முயற்சி ஆகியவற்றை 2030-ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகின்றது.
இந்த குறிக்கோள்கள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது என்பதை விளக்கினார். எனவே ஒரு நாட்டின் வளர்ச்சியில் தனி மனிதர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே நம் நாடு இந்தக் குறிக்கோள்களை விரைவில் அடைவதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் தங்களுடைய கடமையாற்ற வேண்டும் என்றார்.
பின்பு இந்த 17 குறிக்கோள்களையும் மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு மூலம் கற்பித்தார். அதாவது மாணவர்களை மூன்று அணிகளாக பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு குழுவும் தனித்தனியாக இந்த 17 குறிக்கோள்களையும் உடல் அசைவுகள் மூலம் எவ்வாறு வெளிப்படுத்தி கண்டறிவது என்று கலந்துரையாடுவார்கள். பின்பு ஒவ்வொரு அணியிலும் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவர் பெட்டியில் இருக்கும் சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அந்தக்
குறிக்கோள்களுக்கு தகுந்தவாறு தனது உடல் அசைவு மூலம் வெளிப்படுத்துவார், குரூப்பில் உள்ள மற்றவர்கள் அது என்ன குறிக்கோள் என்று சொல்வார்கள். இந்த செயல் மூலம் மாணவர்களிடம் ஆர்வம், கூட்டு முயற்சி, ஒற்றுமை, சிந்தனை, செயல்பாடு, ஆரோக்கியமான போட்டி, நினைவுபடுத்துதல் போன்ற பண்புகள் வெளிப்படும். மாணவர்கள் எளிதாக இந்த குறிக்கோள்களை புரிந்து நினைவில் வைத்துக் கொள்வார்கள். இந்த வீடியோ பதிவு எங்கோ ஒரு பொருளியல் ஆசிரியருக்கும், மாணவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கின்றோம் என்றார்.