கடந்த ஆண்டு (2025) மட்டும் 13.52 கோடி லட்டு பிரசாதங்களை விற்று திருப்பதி தேவஸ்தானம் சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தனித்துவம் வாய்ந்ததாகும். திருப்பதி செல்லும் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பதை எப்படி வழக்கமாக வைத்துள்ளனரோ, அதே போல லட்டு பிரசாதம் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற பின்பு திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதத்தின் தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக லட்டு பிரசாத விற்பனையும் அதிகரித்துள்ளது.
திருப்பதியில் கடந்த 2024-ம் ஆண்டில் 12.15 கோடி லட்டுகள் விற்பனையானது. 2025-ம் ஆண்டில் 13.52 கோடி லட்டு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனையானது. கடந்த ஓராண்டாக நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் தினமும் 8 முதல் 10 லட்சம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. லட்டு பிரசாதத்தை தயார் செய்ய ஏழுமலையான் கோயில் மடப்பள்ளியில் 700 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.