வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து வன்முறை அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இந்து இளைஞரான தீபு சந்திரதாஸ் என்பவரை அடித்துக் கொன்ற கும்பல், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தியது.
இந்த நிலையில், என்சிபி தொழிலாளர் அமைப்பான ஜதியா ஸ்ராமிக் சக்தியின் குல்னா பெருநகரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான முகமது மொதாலெப் சிக்தார் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த வன்முறை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஅன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அவர், ''வங்கதேசத்தில் நாம் கண்ட வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்" என்றார்.
இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில்," வங்கதேசமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நாட்டிலாவது சரி, பெரும்பான்மை இல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.