கர்நாடகாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 17 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கோகர்ணாவிற்கு தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டது. சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பஸ் தேசிய நெஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ் மீது லாரி மோதியது. இதில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 17 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.