திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகையன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இவ்வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், கார்த்திகையன்று வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் திரண்டனர். அப்போது காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் சிஐஎஸ்எஃப் வீரர்களை மலைப்பகுதிக்கு செல்ல தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கிடையில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம், தர்ஹா நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த மாதம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.