திருச்சி என்.ஐ.டி-யின் 52-வது 'ஃபெஸ்டெம்பர் 2026' கலாச்சார விழா: 500 கல்லூரிகளைச் சேர்ந்த 18,000 மாணவர்கள் பங்கேற்பு!
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (NIT Trichy) புகழ்பெற்ற 'ஃபெஸ்டெம்பர் 2026' (Festember 2026) அகில இந்திய அளவிலான கலாச்சார விழா செப்டம்பர் 3-வது வாரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
1975-ல் மாணவர்களின் முயற்சியால் மிக எளிய முறையில் தொடங்கப்பட்ட இவ்விழா, தற்போது 52-வது ஆண்டில் அடிஎடுத்து வைத்து நாட்டின் மிகப்பெரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்தியாவின் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 18 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இவ்விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
இசை, நடனம், ஃபேஷன், கலை, கேமிங், நாடகம், இலக்கியம், புகைப்படம் எடுத்தல் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றிபெறும் அணிக்கு ரூ. 16 லட்சத்திற்கும் அதிகமான பரிசுத்தொகையுடன், புகழ்பெற்ற "இளையராஜா ரோலிங் டிராபி" வழங்கப்படுகிறது.
விழாவில் கார்ப்பே டியம், வாக்ஸ் பாபுலி உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் துருவ் விக்ரம், அதா சர்மா, 'மானி ஹெய்ஸ்ட்' அலெக்ஸ் ரோட்ரிகோ, சித் ஸ்ரீராம், ஜான்டி ரோட்ஸ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு கலந்துரையாடயுள்ளனர்.
இரவு நேர புரோ ஷோக்கள் (Proshows):
விழாவின் முக்கிய ஈர்ப்பாக 'கோல்டன் ஜூபிலி கன்வென்ஷன் ஹால்' அரங்கில் இரவு நேர இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இசைஞானி இளையராஜா, அமித் திரிவேதி, பென்னி தயாள், சுனிதி சௌஹான், ஜோனிதா காந்தி, கார்த்திக் உள்ளிட்ட பிரபல கலைஞர்களும், பல்வேறு முன்னணி இசைக் குழுக்களும் இதில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தரவுள்ள மாணவர்களின் பங்கேற்பால் திருச்சி என்.ஐ.டி வளாகம் திருவிழாக்கோலம் போல் காணப்படும்.