மதுரை புத்தகத் திருவிழாவில் உயிர்மை பதிப்பகத்தின் 6 புதிய நூல்கள் வெளியீடு
மதுரை புத்தகத் திருவிழாவில், உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் ஐந்து எழுத்தாளர்களின் ஆறு புதிய நூல்கள் வெளியீட்டு விழா o நடைபெற்றது.
மதுரை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம், இந்த ஆண்டும் இலக்கியம், இசை மற்றும் உளவியல் சார்ந்த ஆறு நூல்களை வெளிட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய நேர்காணல் தொகுப்பான ‘உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டவில்லையென்றால் இந்த உலகில் வேறு யார் காட்டுவார்கள்?’ நூலினை கவிஞர் கலாப்ரியா வெளியிட, கவிஞர் லிபி ஆரண்யா பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் நவீனா அமரன் வாழ்த்துரையும், கவிஞர் லிபி ஆரண்யா சிறப்புரையும் வழங்கினர்.
கவிஞர் கலாப்ரியா எழுதிய ‘மோட்ச தீபம்’ சிறுகதைத் தொகுப்பினை ந. முருகேச பாண்டியன் வெளியிட, எழுத்தாளர் சித்ரா சிவன் பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினார்.
டாக்டர் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ஜென்சீ (Gen Z) தலைமுறையினர் குறித்த உளவியல் நூலான ‘தனித்திருக்கும் தலைமுறை: இன்ஸ்டா பெண்களும் சாட்பாட் ஆண்களும்’ நூலினை ந. முருகேச பாண்டியன் வெளியிட, நவீனா அமரன் பெற்றுக்கொண்டார். நூல் குறித்து ந. முருகேச பாண்டியன் உரையாற்றினார்.
மதுரை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப.கவிதா குமார் எழுதிய ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’ நூலினை கவிஞர் மனுஷ்ய புத்திரன் வெளியிட, ப. கபிலரசன் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார்.
ப.கவிதா குமார் எழுதிய மற்றொரு நூலான ‘இளையராஜாவின் ரசிகன்’ நூலினை கவிஞர் ஆத்மார்த்தி வெளியிட, கவிஞர் லிபி ஆரண்யா பெற்றுக் கொண்டார். இப்புத்தகம் குறித்து ஆத்மார்த்தி கருத்துரை வழங்கினார்.
கவிஞர் பாலபாரதி எழுதிய ‘காற்றிலாடும் காகிதப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பினை கவிஞர் கலாப்ரியா வெளியிட, தீபா நாகராணி பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினார். விழாவின் நிறைவாக நூலாசிரியர்கள் அனைவரும் ஏற்புரை வழங்கினர். கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஏற்புரையுடன் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.