அரசு மருத்துவமனையில் மது அசைவ உணவுடன் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக 4 டாக்டர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இரு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு ஒரு கட்டிடமும், புற நோயாளிகள் உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளுக்கான பிரிவு மற்றொரு கட்டிடமும் இயங்கி வருகிறது. கடந்த 31-ம் தேதி இரவு கல்லல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் காயமடைந்தார். அவரை வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அறை உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள நோயாளிகள் படுக்கும் கட்டிலில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மீன், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகள், நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிலர் அந்த வார்டில் புத்தாண்டு தினத்தை மது, அசைவ உணவுகளுடன் கொண்டாடியதாக தெரிகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், மது உள்ளிட்டவற்றை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.