தமிழக தகவல் ஆணையராக முதல் முறையாக பத்திரிகையாளர் நியமனம்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக பத்திரிகையாளர் ஒருவர் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஊடகத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் பி. மகாலிங்கம்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் (Tamilnadu State Information Commission) பொதுமக்களுக்கு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தருவதற்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் எழும் புகார்களை விசாரிப்பதற்கும் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) 2005 ஜூன் 15-ம் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்த எம்.டி. ஷகீல் அக்தர், IPS- ன் பதவிக்காலம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி நிறைவடைந்தது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு, தற்போது புதிய தலைமை தகவல் ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் எஸ். நடராஜன், தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மாநில தகவல் ஆணையர்களாக எஸ். மகாலட்சுமி, டி.கே. ஷபீர், சி.பி. மீனா மற்றும் பத்திரிகையாளர் பி. மகாலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பதவிக்காலம், பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் நாள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவே பதவிக்காலமாகும். இதற்கான அரசாணையை மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டது.
மகாலிங்கம் இதற்கு முன்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். அதன் பிறகு 'தி பெடரல்' டிஜிட்டல் நியூஸ் மற்றும் பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பத்திரிகையாளருக்கு மதிப்புமிக்க இப்பதவியை வழங்கிய தமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.