தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 3) அமைதிப்பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார்.
இந்த பேரணியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். அங்கிருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்பட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.