ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரித்து வருகின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் கஃபே மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது இதில் ஒரு குழந்தை உள்பட 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பிராந்திய ஆளுநர் விளாடிமிர் சல்டோ கூறுகையில், கடலோர கிராமமான கோர்லியில் உக்ரைன் மூன்று டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இது பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல் என்றும், பலர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், நாடு முழுவதும் ஏழு பிராந்தியங்களில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து உக்ரைனுக்கு எதிராக இருநூறுக்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 20மணி நேரத்தில் மாஸ்கோவை நோக்கிச் சென்ற 29 உக்ரைனின் டிரோன்களை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு பிரிவினர் சுட்டு வீழ்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
ரஷ்ய பிராந்தியங்களான கிராஸ்னோடர், டாடர்ஸ்தான் மற்றும் கலுகா முழுவதும் உக்ரேனிய ட்ரோன்கள் எரிசக்தி மற்றும் தொழில்துறை இலக்குகளை இரவு முழுவதும் தாக்கியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மூன்று தாக்குதல்களில் இரண்டை நடத்தியதாக உக்ரேனிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.