மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் த வெ க ஆட்சியில் அதிகரிப்புக்கு கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிக்கை
தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த 5 மாதங்களில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை தினக்கூலி பணியாளர்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டத்தின் நியாயத்தை கேட்காமல் போராட்டக்காரர்களை அரசு ஒடுக்குவதாகவும், காவல்துறை மூலம் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்தடை மற்றும் தலைமைச் செயலகத்திலேயுமே மின்வெட்டு ஏற்பட்டதை அரசு மறைக்க முயல்வதாகக் குறிப்பிட்ட அவர், அரிசி, காய்கறி, எண்ணெய் மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பது தடை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட ஆர்.பி. உதயகுமார், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது 40,000-த்திற்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி அளித்து ஜனநாயக முறைப்படி அணுகியதைச் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையைக் கையாள்வதை விட்டுவிட்டு, போராடும் மக்களை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள்
நேரில் அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமையைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.