திமுக, காங்கிரஸ் உறவுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்துள்ள ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. அந்த குழுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்து பேசியது.
இந்த நிலையில் நடிகர் விஜ்ய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்(தவெக) கூட்டணி அமைக்க அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இதனால் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் வதந்தி தான் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெளிவுபடுத்தினார். அத்துடன் திமுகவுடன் நல்லமுறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை திமுகவிடம் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் ஐபிடிஎஸ்( IPDS) நிறுவனத்தின் கருத்துக்கணிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த கருத்துக் கணிப்பில், தற்போதைய சூழ்நிலையில் திமுகவுக்கு 17.07 சதவீதம், அதிமுகவுக்கு 15.03 சதவீதம், தவெகவுக்கு 14.20 சதவீதம்; நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம், காங்கிரஸ் கட்சிக்கு 3,10 சதவீதம் ஆதரவு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பை ஷேர் செய்த மாணிக்கம் தாகூர் எம்.பி, “ தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே ! Time for share of power not only Share of seats” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பியின் இந்த ட்விட் திமுக கூட்டணியினரிடையே மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.