வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிசம்பர் 30) காலமானார். அவருக்கு வயது 80.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியா இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளால் கலீதா ஜியா அவதிப்பட்டு வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்து இருந்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியா இன்று காலை 6 மணிக்கு காலமானதாக என்று அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கதேச பிரதமராக முதன்முறையாக 1991 மார்ச் முதல் 1996 மார்ச் வரை பதவி வகித்த கலீதா ஜியா 2001 ஜூன் முதல் 2006 அக்டோபர் வரை 2-வது முறையாகவும் பிரதமராக அவர் பதவி வகித்தார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையாளரான கலீதா ஜியா ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த கலீதா ஜியா, 2024-ம் ஆண்டு தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.