நிதி பற்றாக்குறையால் 30,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஆரக்கிள் நிறுவனம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரக்கிள் நிறுவனம் சார்பில் ஏஐ டேட்டா மையங்கள் அமைக்கும் பணிக்கு போதிய நிதி இல்லாததால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக ஆரக்கிள் திகழ்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்த ஆரக்கிள் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு பிரச்னைகளில் இந்த நிறுவனம் சிக்கியுள்ளது. புதிதாக ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) தரவு மையங்களை உருவாக்க ஆரக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் ஏ.ஐ முதலீடுகளை அதிகரிக்கத் தொடங்கியது. அத்துடன் ஓபன் ஏ.ஐ உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏ.ஐ மையங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு நிதி பற்றாக்குறையில் ஆரக்கிள் நிறுவனம் சிக்கியது. இதனால் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்துக்கு 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இதனை அந்த நிறுவனம் ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. இருப்பினும் இது போதுமானதாக இருக்காது. இதனால் அந்த நிறுவனம் சில பிசினஸ் யூனிட்டுகளையும் விற்பனை செய்வது பற்றியும் ஆராய்ந்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதன்படி கிளவுட் அடிப்படையிலான ஹெல்த் சாப்ட்வேரை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலமாக நிறுவனத்துக்கு கூடுதலாக நிதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.