எல்லை தாண்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கும் வேலையில் தொடர்ந்து இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம் 28-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களையும், 30-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச எல்லையை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.