சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் விற்பனையில் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக உதவி அர்ச்சகர் சுனில்குமார போற்றியை விஜிலன்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி யாத்திரை வருகிறார்கள். இந்த கோயிலில் நெய் விற்பனை செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஊழல் தடுப்பு பிரிவு (விஜிலன்ஸ்) போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது விஜிலன்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த உதவி அர்ச்சகர் சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார், சுனில்குமார் போற்றியை கைது செய்தனர். இந்த வழக்கில் 13வது குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் முதல் கைது நடவடிக்கையாக சுனில்குமார் போற்றி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.