02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
வியட்நாமில் இருந்து சென்னைக்கு ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
BY NEWS TODAY
07 Feb 2026
0
பகிர்

சென்னை விமான  நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள  ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக கஞ்சாவை  கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்திக் கொண்டுவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், வியட்நாமில் உள்ள வினோய் நகரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கோலாலம்பூர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. 



அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை செய்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த பயணிகள் இருவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களின்  உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட பார்சல்களில்  ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. சுமார் 11 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் இருவரும் கடத்தல் குருவிகளாக செயல்பட்டதும், கஞ்சாவை விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து அவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் மேலும் ஒரு பயணியும் இவர்களுடன் கஞ்சா கடத்திவந்ததும், ஆனால் அந்த பயணி சோதனையில் சிக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது.  அவரைப் பிடித்து உடமைகளை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் சர்வதேச மதிப்பு சுமார் 15 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.



இதனைத் தொடர்ந்து கடத்தல் குருவிகளிடமிருந்து கஞ்சாவை பெற, விமான நிலையத்திற்கு வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பிப்ரவரி 3-ம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து அந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் 5- ம் தேதி தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இதேபோல் உணவு பார்சல்களில் கஞ்சாவை கடத்தி வந்தனர்.



அவர்களிடம் தீவிர பரிசோதனை மேற்கொண்டு சுமார் 10 கோடி மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் கடத்தல் குருவிகளாக மட்டுமே செயல்பட்டதாகவும், குறிப்பிட்ட ஒரு நபரிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்ள இருந்ததாகவும் தெரிவித்தனர். இவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த 2  வழக்குகளிலும் கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றும், வேலைவாய்ப்பு இல்லாததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்