கோர்ட்டில் காக்க வைக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்   லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி
BY NEWS TODAY
28 May 2026
0
பகிர்

கோர்ட்டில் காக்க வைக்கப்பட்ட அருண் ஐபிஎஸ்

 குண்டாஸ் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி



முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்..

 லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையருமான ஏ.அருண் ஐபிஎஸ் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். நீதிபதிகள் அவரை நீதிமன்றத்திலேயே காத்திருக்கச் செய்த அதிரடி உத்தரவு பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது. சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் தொடர்பான மோசடி வழக்கில் சந்தோஷ் சர்மா மீது போடப்பட்ட குண்டர் சட்ட உத்தரவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு கோடைகால விடுமுறை சிறப்பு அமர்வில்,

விசாரணைக்கு வந்தது. 

 நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, வழக்கைத் தள்ளி வைத்து (Pass Over), அருண் ஐபிஎஸ்-ஐ நீதிமன்ற அறையிலேயே காத்திருக்க உத்தரவிட்டது.

 இந்த வழக்குக்கான சம்மனை வழங்க உயர் நீதிமன்ற பெய்லிஃப் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்றபோது, ஏ. அருண் ஐபிஎஸ்-ஐ சந்திக்க சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். "நீதிமன்ற ஊழியரையே 2 மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள் அல்லவா? எனவே நீங்களும் இப்போது காத்திருங்கள்" என்று கூறிய நீதிபதிகளின் இந்தக் கருத்து, நீதிமன்ற மரியாதை குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.

வழக்கின் பின்னணி:

லோகா டெவலப்பர்ஸ் (முன்னாள் ஸ்டைல் ஒன் பிராப்பர்டீஸ்) நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதியுடன் மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஒப்பந்தத்தின்படி பூர்ணஜோதிக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளில் 48 வீடுகளுக்கு போலி கையெழுத்திட்டு முறைகேடாக விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 42.94 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளிவருவதைத் தடுக்கும் வகையில், 2025 செப்டம்பர் 22 அன்று அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ. அருண் ஐபிஎஸ், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுதான் தற்போது பெரும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா சர்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஒரு சாதாரண வணிக மற்றும் சொத்து தகராறில் குண்டர் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று கடும் அதிர்ச்சி வெளியிட்டனர். "இந்த உத்தரவு எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது" எனக் கூறிய நீதிபதிகள், சிவில் விவகாரத்தை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகக் கருதியதற்கான அடிப்படையை விளக்குமாறு ஏ. அருண் ஐபிஎஸ்-ஐ நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கை:

உத்தரவுப்படி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான ஏ. அருண் ஐபிஎஸ், நீதிபதிகளின் 'வெயிட்' உத்தரவால் பரபரப்பை ஏற்படுத்தினார். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நீதிமன்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை வலியுறுத்தும் வகையில் நீதிபதிகளின் இந்த நடவடிக்கை, அதிகார வர்க்கத்திற்கு ஒரு முக்கிய செய்தியை அளிப்பதாகக் கருதப்படுகிறது. அதிகாரி தரப்பு தங்கள் விளக்கத்தை முழுமையாகச் சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் இறுதி முடிவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்