26
Jul 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்;
BY NEWS TODAY
20 Jul 2026
0
பகிர்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13-ம் தேதி வரை நடக்க உள்ளது. நாட்டில் உயர் கல்வியை நிர்வகிக்க தனித்தனியே செயல்படும் யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆகியவற்றை கலைத்துவிட்டு, ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ அமைக்க வகை செய்யும் ‘விக்சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான்’ மசோதா மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா ஆகியவை ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. அவற்றை இந்த கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மேலும் வருமான வரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, பிறப்பு - இறப்பு பதிவு, குறு, சிறுதொழில் மேம்பாடு தொடர்பான திருத்த மசோதாக்கள் மற்றும் ‘வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் தேசிய கவுரவ திருத்த மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் தொடரில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற் கான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதாக்கள் தோல்வி அடைந்தன. இந்த மசோதாக்களை மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ள்ளன. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்பட்டது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுபற்றியும் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது மட்டுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, நாட்டின் வெளியுறவுக் கொள்கை, நீட் முறைகேடு தொடர்பாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப் பட்டது.

‘உறுப்பினர் பதவிக்கு பாதிப்பு இல்லாமல் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம். நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களை செய்யலாம்’ என்று கூட்டுக்குழு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

‘‘கூட்டத்தொடரில் 19 அமர்வுகள் நடைபெறும். மாநிலங்களவையில் வந்தே மாதரம் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்வார்’’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. தற்போது மக்களவையில் 540 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதாக் களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப் படுகிறது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், சிவசேனாவின் உத்தவ் அணியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் சமீபத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இதனால், மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் சரத்பவார் அணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்

தக்கது.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்