தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் 'ஜனநாயகன்': இன்று விடை கிடைக்குமா?
BY NEWS TODAY
20 Jan 2026
0
பகிர்

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 20) விசாரிக்கிறது.



தமிழக வெற்றிக் கழக தலைவர் (தவெக) விஜய் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'அவரின் கடைசிப் படம் என்ற அறிவிப்புடன் கடந்த 9-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை. அது சொன்ன சில திருத்தங்களை படக்குழு செய்தது. ஆனால், 'ஜனநாயகன்' படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதால் மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவிஎன் புரொக்டஷன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.



இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 'ஜனநாயகன்'திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பி.டி.ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீதிபதி பி.டி.ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தது.



இதனால் 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என இப்படம் வெளிவராததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் 'ஜனநாயகன்' படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியது.



இதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக 'ஜனநாயகன்' படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்