ஆளுநர் உரை நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
BY NEWS TODAY
20 Jan 2026
0
பகிர்

ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு, நாடு முழுவதும் உள்ள ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து நாடாளுமன்றத்தில் திமுக முயற்சிகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



ஆளுநர் வெளிநடப்பு



தமிழ்நாடு  சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 20) தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று வலியுறுத்தி அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இருந்து நான்காவது ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வெளிநடப்பு செய்துள்ளார்.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்



ஆளுநர் ரவி வெளியேறிய பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சட்டப் பேரவையில் மீண்டும் ஒரு முறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே என்று சொல்வதை விட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 176-ன் படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  இதில் ஆளுநர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் சட்டப் பிரிவு 176-ன் படி, தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன்.



தீர்மானம்



ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று அண்ணா கூறிய போதிலும், அதை கருணாநிதி வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும் வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை. இந்த அரசும் தவறியதில்லை என்று 2023-ல் இதே சட்டப்பேரவையில் கூறியிருந்தேன். எனினும், ஆளுநர் ஏற்கெனவே நடந்து கொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு, ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும்.



அதை தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால், நம்முடைய ஆளுநர், அதற்கு மாறாகச் செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பி வருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம்.  எனினும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், கீழ்க்காணும் தீர்மானத்தை பேரவைத் தலைவரின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐ தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன். ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல், ஆளுநர் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது.



மேலும், மரபுவழி நிகழ்வுகள், பேரவைத் தலைவரால் படிக்கப் பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்றார். இதையடுத்து  தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தந்த உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.



அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தம்



அப்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனை கடந்து விட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் முறையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும் போது, அது போன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டுமென்ற கேள்வி சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும். எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை நாடு முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன்” என்றார். 





 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்