11
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் இன்று மதுரையில் நடைபெற்றது
BY NEWS TODAY
06 Mar 2026
0
பகிர்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பரப்பப்படும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கான நவீனத் திறன்களை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் பழனிச்சாமி வலியுறுத்தல்


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் இன்று மதுரையில் நடைபெற்றது.


இந்த பயிலரங்கில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெ. பழனிச்சாமி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செய்தியாளர்கள் பரபரப்பு செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும் வகையில் ஊடகங்களும் செய்தியாளர்களும் ஒரு பாலமாகச் செயல்பட வேண்டும். தற்போது சவாலாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரப்பப்படும் போலி செய்திகளைக் கண்டறிவதற்கான நவீனத் திறன்களை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கமளித்தனர். மத்திய தொழிலாளர் நல ஆணையர் (மதுரை மண்டலம்) பிரவீன் பாண்டி மோகன்தாஸ், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes) குறித்து விளக்கினார். 29 பழைய தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 4 புதிய தொகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளதன் நோக்கம் மற்றும் அதன் நவீன நடைமுறைகள் குறித்து பேசினார்.

தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனத்தின் (NIOS) சென்னை மண்டல இயக்குநர் வெ. சந்தானம், "அனைவருக்கும் கல்வி" என்ற இலக்கின் கீழ் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ் படிப்புகள் மற்றும் 86 வகையான தொழிற்கல்வி படிப்புகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் எவ்வாறு பயன்பெறலாம் என விளக்கினார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மதுரை மண்டல அலுவலர் கோவிந்தசாமி பேசுகையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து விளக்கினார். நெடுஞ்சாலைப் பயணத்தை எளிதாக்க 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியின் முக்கியத்துவம் மற்றும் வருடாந்திர பாஸ்டாக் வசதி பயனர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் பேசினார்.

 ஊடகத்துறை வல்லுநர் ஹபீப் ரகுமான், இன்றைய செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் செய்தியாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். 'டீப்ஃபேக்' போன்ற சவால்களை எதிர்கொள்ளவும், செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும் தேவையான பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகள் குறித்து அவர் நேரடிப் பயிற்சி அளித்தார்.

முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் பி. அருண்குமார், வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் விஜயலட்சுமி நன்றியுரை வழங்கினார். இந்த பயிலரங்கில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் இதழியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்