இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்- அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
BY NEWS TODAY
12 Feb 2026
0
பகிர்

அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.



மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று ( பிப்ரவரி 12)  மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில், பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறி வித்துள்ளன. விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்த கிஷான் மோர்ச்சாவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கிறது. தமிழ்நாட்டில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த நிலையில்,திமுகவும் இப்போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளது.



இன்று  நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்சாரம், போக்குவரத்து, காப்பீடு, சுகாதாரம், வங்கி உள்ளிட்டவைகளின் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களை வாபஸ் பெற வேண்டும்.  வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் பணிச் சுமையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வங்கி ஊழியர்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.



வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், காசோலை பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனினும், ரிசர்வ் வங்கி அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்காததால், வங்கி கிளைகள் சட்டப்படி திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு ஊழியர்களும் இன்று நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் குருநாதன் வெளியிட்ட அறிக்கையில், "நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அணுசக்தி உற்பத்தியில் நுழைய அனுமதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கக்கூடாது. இதை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் 60 மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் இணைந்து இன்றை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளனர்.



இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.  அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனால் அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது கட்டாயம்; வராதவர்களுக்கு 'நோ வொர்க் - நோ பே' விதி அமல்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்