02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஊழல் அமைச்சர் நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- விஜய் வலியுறுத்தல்
BY NEWS TODAY
20 Feb 2026
0
பகிர்

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. 

எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்