02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்- அன்புமணி ராமதாஸ்!
BY NEWS TODAY
20 Feb 2026
0
பகிர்

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது.

சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 5 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு மகாராஷ்டிரத்தில் நடைமுறைக்கு வரவே இல்லை. அங்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது. ஆனால், இல்லாத இட ஒதுக்கீட்டுக்காக போர் முழக்கம் எழுப்பும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு செய்த துரோகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமது மைத்துனரின் ஆதரவில் செயல்பட்டு வரும் தமது சாதி சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வாதங்களை வலிமையாக வைக்காமல் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 31.03.2022-ம் நாள் ஆணையிட்டது. அதன்பின் இன்றுடன் 1423 நாள்களாகியும் இன்று வரை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு நடத்தவில்லை.

இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் சமூகநீதிக்கு துரோகத்தை மட்டும் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு சமூகநீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுத்து துரோகம் செய்த திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்