16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு
BY NEWS TODAY
13 Jan 2026
0
பகிர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனையொட்டி பக்தர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



கேரளா மாநிலம்,  சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16- ம் தேதி சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27-ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நாளை (ஜனவரி 14)  மகரசங்கராந்தி தினத்தன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.



இதற்காக ஜனவரி 14-ம் தேதியன்று பகல் 2.45 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, 3.08 மணிக்கு மகர சங்கராந்தி பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளன. பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி மாலை 6.15 மணியளவில் சன்னிதானத்தை வந்து அடையும். தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருவாபரணப் பெட்டியை வரவேற்று, ஏற்றுக் கொள்வார்கள். மாலை 6.40 மணிக்கு திருவாபரணங்கள் சாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.  இதையடுத்து பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.  இதனைக் காண லட்சக்கணக்கான  பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால், அவர்களின் பாதுகாப்பு கருதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



மகர விளக்கு உற்சவத்தை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக இன்று (ஜனவரி13) குறைக்கப்பட்டுள்ளது. மகரசங்கராந்தி நாளான நாளை மேலும் குறைக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருவாபரணப் பொட்டி ஊர்வலம் பாதுகாப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக ஜனவரி 14 அன்று திருவாபரணப் பெட்டி வரும் பாதையில் பக்தர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனம் பார்க்க பெரிய பாதை வழியாக வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனுமதித்த இடங்களில் இருந்து மட்டுமே பக்தர்கள் மகரஜோதியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஜனவரி 15- ம் தேதி முதல் வழக்கமான எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19-ம் தேதியன்று மீண்டும் பக்தர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக குறைக்கப்படும் என்றும், ஜனவரி 19-ம் தேதி இரவுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்படும் என்று  தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்