16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தம்பி அண்ணாமலை தமிழ் இனத்தின் மகன்: ராஜ்தாக்கரேவிற்கு சீமான் கண்டனம்!
BY NEWS TODAY
14 Jan 2026
0
பகிர்

தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



இது தொடர்பாக வெளியிட்டுள்ள அவரது  எக்ஸ் தள பதிவில்," 'மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்' என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை. அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக சிவசேனா, போராடுவது 100 சதவீதம் சரியானதே. அதேபோன்று மராத்திய மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போரிடும் சிவசேனா கட்சியின், தாய்மொழி கொள்கையும் 100 சதவீதம் சரியானதே. தேசிய இனங்களின் உரிமைக்காக போராடும் அனைத்து தேசிய இன மக்களின் கருத்தோடும் உடன்படுகின்றோம். தேசிய இனங்களின் உரிமை மீட்புக்கான போராட்டத்தில் மராத்திய மாநில உரிமைக்காக குரல் கொடுக்கவும், துணை நிற்கவும் தயாராக உள்ளோம்.



ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, அம்மண்ணில் நின்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, 'மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம்' என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை. ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது. தம்பி அண்ணாமலையின் கருத்தியல், கோட்பாடு அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் முற்றிலும் முரண்படுகிறோம். அதற்கு நேர் எதிரான, அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இருப்பினும், தம்பி அண்ணாமலையின் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக, தம்பி அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் எனும் கொடும்போக்கு ஒரு போதும் ஏற்புடையதல்ல.



அண்ணாமலை ஒரு தனி நபர், ஒரு கட்சியைச்சேர்ந்தவர், குறிப்பிட்ட கொள்கையை ஏற்றவர் என்பதை மட்டும் கருத்தில்கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல; ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல; ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும்; அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களை வழிநடத்தும் மதிப்புமிக்கத் தலைவர் பெருமக்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியானதல்ல; கடந்த காலங்களில் ஆந்திர காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் கேட்க நாதியில்லை; நடுக்கடலில் மீனவர்கள் தமிழர்கள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் கேட்க நாதியில்லை; அப்படி ஒரு நிலை தமிழ் மண்ணில் இன்று இல்லை. அண்ணாமலை தனி நபரல்ல; முதலில் அவர் தமிழ்த்தேசிய இனத்தின் மகன். தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம். தம்பி அண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்