Hot News :
For Advertisement Contact: 9360777771

மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர்?: மண்டலத்தலைவர்கள் ராஜினாமாவின் பரபரப்பு பின்னணி!

© News Today Tamil

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அனைத்து மண்டல தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மதுரைக்கு புதிய மேயர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் பரவியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை அடிப்படையில்  மதுரை மாநகராட்சி ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், மூன்றாவது மண்டலத் தலைவர் பாண்டிசெல்வியின் உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். 

அவர்களைத் தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும் போலீஸார் விசாரித்தனர். 

இதனிடையே மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு  வந்தார்.  அவரது தலைமையில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆணையர் சித்ரா முன்னிலையில் மண்டலம்-2 தலைவர் சரவண புவனேஷ்வரி, மண்டலம்-3 தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம்-4 தலைவர் முகேஷ் சர்மா, மண்டலம்-5 தலைவர் சுவிதா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. 

சொத்து வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் என பலரிடமும் அமைச்சர்கள் தலைமையிலான குழு சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி மண்டத்தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து  மண்டல குழு தலைவர்களான சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அமைச்சர்கள் குழுவிடம் கொடுத்தனர். இதேபோல நிலைக்குழுவின் உறுப்பினர்களான கண்ணன், மூவேந்திரன் ஆகியோரும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.  மேலும் மேயர் இந்திராணிக்கு அமைச்சர்கள் குழு கடும் எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த், கடந்த மாதம் திமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதனால் மேயர் இந்திராணி மீதும் எந்த நேரத்திலும் நடவடிக்கை பாயலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரான வாசுகி மதுரை மேயராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிமுக சார்பில் சொத்துவரி முறைகேட்டை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள நிலையில் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post இன்றைய பஞ்சாங்கம்
Next Post மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர்?: மண்டலத்தலைவர்கள் ராஜினாமாவின் பரபரப்பு பின்னணி!
Related Posts