அரியலூரில் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து அதற்கான பிரச்சார ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடித்திருவாதிரை நட்சத்திர நாளான ஜூலை 27-ம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளாகும். இவர் தான் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டியவர். தமிழ்நாடு அரசு சார்பில், ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அரியலூரில் ஜூலை 27-ம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் டெல்லியில் இருந்து வந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தததாக கூறப்படுகிறது.