மதுரை கோரிப்பாளையம் அருகே புதிய மேம்பாலம் கட்டுமானப் பணியில் தூண்கள் அமைக்கப்படுவதால் இன்று (ஜூலை 10) முதல் அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பாலத்திற்காக துாண்கள் அமைக்கும் பணிகளுக்காக இன்று முதல் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆழ்வார்புரம் இறக்கம், தேனி ஆனந்தம் சாலை சந்திப்பில் இருந்து குமரன் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
மதுரை தத்தனேரி சாலையில் இருந்து வைகை வடகரை சாலை வழியாக விரகனுார் சாலைக்கு செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் பாத்திமா கல்லுாரியிலிருந்து இடதுபுறம், கூடல்புதுார் பாலம், ஆனையூர், அய்யர்பங்களா, மூன்று மாவடி, 120 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும்.
குருவிக்காரன் சாலையிலிருந்து வைகை வடகரை சாலை, தத்தனேரி மெயின் ரோடு வழியாக திண்டுக்கல் ரோட்டிற்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் வைகை தென்கரை சாலை வழியாக எம்.ஜி.ஆர்., பாலத்தில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை சென்று செல்ல வேண்டும். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லக்கூடிய நகர, புறநகர் பேருந்துகள், தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா பாலம் ஸ்டேஷன் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அழகர்கோவில் சாலையில் இருந்து தமுக்கம் வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பாத்திமா கல்லுாரி சந்திப்பு செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் கே. கே. நகர் ஆர்ச், பெரியார் சிலை சந்திப்பு, தமுக்கம், கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி., பாலம் வழியாக அண்ணா சிலை சென்று செல்ல வேண்டும். அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்லக்கூடிய நகரப் பேருந்துகள் பனகல் ரோடு சிவசண்முகம்பிள்ளை தெரு வைகை வடகரை வழியாக ஓபுளா படித்துறை பாலம் சென்று வைகை தென்கரை வழியாக செல்லவேண்டும்.
ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்துகள், குருவிக்காரன் சாலை ரவுண்டானா, காமராஜர் சாலை, முனிச்சாலை வழியாக செல்ல வேண்டும். அழகர்கோவில் சாலையில் இருந்து செல்லக்கூடிய வாகனங்கள் ஆழ்வார்புரம் இறக்கம் வைகை வடகரை, ஓபுளா பாலம், மீனாட்சி கல்லுாரி சாலை, ஏ.வி., பாலம் வழிகளைப் பயன்படுத்தி நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம். யானைக்கல் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை சாலையில் செல்லும் வழி தற்காலிகமாக அடைக்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தின் இடதுபுறம் திரும்பி திருமலைராயர் படித்துறை சாலை வழி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.