பாகிஸ்தானின் பிரபல நடிகையும், மாடலுமான ஹுமைரா அஸ்கர் அவரது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர்(32). மாடலாகவும் வலம் வந்த இவர் கராச்சியில் தனியாக வசித்து வந்தார். பாகிஸ்தான் திரைப்படத்துறையிலும், தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலமானவர். இதன் மூலம் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை இவர் பெற்றிருந்தார்.
கராச்சியின் இட்டெஹாத் பகுதியில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். வீட்டின் உள்புறம் பூட்டியிருந்ததால் கதவை உடைத்து போலீஸார் உள்ளே புகுந்தனர். அங்கு அழுகிய நிலையில் ஹுமைரா அஸ்கர் சடலமாக கிடந்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் இறந்து மூன்று வாரங்கள் இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜின்னா பாஸ்ட் கிராஜுவேட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அவரது வீட்டில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான சாட்சியம் இல்லை என்று தெரிவித்தனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டு வாடகையை செலுத்தாமல் இருந்த காரணத்தால், அந்த வீட்டை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், போலீஸார் வந்து பார்த்த போது, நடிகை ஹுமைரா அஸ்கர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என்று காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சையத் அசாத் ரசா தெரிவித்துள்ளார்.