மூன்று மாதங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பிரபாகர் கூறினார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்வானர்களை பணியிடங்களுக்கு தேர்வு செய்கிறது.
அவ்வகையில், தமிழ்நாடு அரசுப்பணியிடங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 10-ம் வகுப்பு தகுதி உள்ளவர்கள் எழுதக்கூடிய இத்தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மே மாதம் 24-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட்டது.
அதன்படி 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் இந்த தேர்வை இன்று எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குரூப் 4 தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை. குரூப் 4 தேர்வு வினாத்தாள், விடைத்தாள் அனைத்து பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார் .